Wednesday, November 7, 2012

தலைப்புச் செய்தி


நீ தவறவிட்ட  பேருந்து
நதியில் தாவி விழுந்து
தற்கொலைக்கு முயன்றதாய்!

Tuesday, October 23, 2012

நிதர்சனம்


சமூக வலைதளத்திற்கு
அணிகின்ற
முகமூடி
கழற்றி எறிகிற நொடியில்
யதார்த்தத்தை 
எதிர்கொள்கிறார்
நித்தமும்
நிராயுதபாணியாய்...

Saturday, October 20, 2012

ஹைக்கூ பிறந்த கதை

பட்டாம்பூச்சியை
பிறந்த நாளுக்காய்ப் பரிசளித்தேன்
ஹை.. என்று கூச்சலிட்டாய்
ஹை.க்..கூ!!!

அழகியல்

அண்ணன் அணிவித்த ஸ்வெட்டர்
அப்பா வாங்கித்தந்த அலைபேசி
அம்மா  போட்டுவிட்ட தங்க செயின்
அக்கா ஆசையாய் கொடுத்துவிடும் பாக்கெட் மணி
என்பதில் இருந்த ஆர்வமும் ஆசையும்
ஏனோ இருப்பதில்லை
எனக்கான சட்டையை
அறிவு ஜீவி அலைபேசியை
அழகியலான பைக்கை
நானே வாங்கிக் கொள்கிற போதும்...

Sunday, October 14, 2012

இரங்கற்பா





முப்போகமே விளையுமே   மும்மாரி பொழியுமே 
எப்போதுமே  பசுமையே  விளைநிலங்கள் - இப்போதோ
சப்தமிட்டு விற்பனையே  மனைகளாக்கி  மாளிகையாய் 
தப்புவதும் கல்விக்கூடம் ஆம்

Friday, October 12, 2012

அவள்..


நான்

தவறவிட்ட

பேருந்தின்

முன்னிருக்கைப் பயணி.

நான்

எழுத  மறந்த

தொடர்கதையின்

முற்றுப்புள்ளி..

 

Saturday, October 6, 2012

நெடுஞ்சாலை நாகரிகம்


கிழித்தெறியப் பட்ட  உடலும்,
முறுக்கி உடைக்கப்பட்ட எலும்பும்,
குருதி  தோய்ந்த சாலையும்,
இப்போதைப் போலவே
கடந்திருக்கிறேன்  

இதற்கும் முன்பும்
 
கண்ணீர் சிந்தவோ,
அஞ்சலி  செலுத்தவோ,
இடம்கொடா
வாகனங்களின்  வரவும், விரைவும்

சக்கர வியூகத்தில்
எந்திர முத்ததத்தில்
சாலையே சவக் காடாய்!
 
எல்லாமே நன்றுதான்
நீளும் நெடுஞ்சாலையில்,
வாழ்வெனும் பயணத்தில் 
நிற்க நிதானிக்க,
நேரமில்லை, மனமுமில்லை -
யாருக்கும்

உடல்களை,
தவறுகளை,
தன்னுள் புதைத்து
மௌனமாகிறது
நெடுஞ்சாலை
மரணத்தின் நெடியுடனே..






 

Monday, August 13, 2012

கானல் நீர் கானகம்..

தனிமை நிரம்பி வழியும்
நீள் இரவும்,
சூறைக் காற்றும்
கிழித்துப் போட்ட
கானகத்தின் கடைசி இலையாய் ...யான்

'இருக்கிறேன்' என்பதா?
என்பதெனில்
நிகழ்காலமா ?  'இறந்த' காலமா ?
பொய்த்துப் போய்விடும் காலக் கணிதம்
உடைந்திடும் கணத்தில் விடுதலை எமக்கு ..

உதிர்ந்தவை உலர்ந்து போக
பறந்தவை மறைந்து போக
சிறந்தவை    சிதைந்து     போக
எம் விதி என் செய்யும் அறிகிலேன்...

காயப்படும் காம்புகள் என்றெண்ணி  இருப்பதா?
சருகளோடு சருகாய்க் கருகுவதா.
இலையுதிர்க்  காலமே..
இறுதியாய் ஒன்று..
பிய்த்தெறியும் எமை
வலிக்காமல்..
காம்புகள் கண்ணீர் சிந்தாமல்

Sunday, July 22, 2012

நாம் தமிழர் ?


வந்தாரை வாழ வைத்தவன்
வாழ வழியற்று
எலிக்கறி சாப்பிடுகிறான்

யாழிசையும் எழுநிலை மாடமும் என்றால்
"இன்னாபா து ??" என்கிறான்
செந்தமிழ் , பாரதி, தமிழன்  என்றால்
"வோட்டு வோணுமா ?? துட்டு எவ்ளோ ???" என்கிறான்

மானாட மயிலாட
பார்க்கத் தெரிந்த மரத் தமிழன்
முறத்தால் நங்கையர்
புலி விரட்டிய மாண் பறிவரோ??

பேட் மேனும்  சூப்பர் மேனும் தெரிந்தவனுக்கு
கனக விசயனின் தலை சுமந்த கதை தெரியுமா ??

பேச , எழுத, படிக்க அறிகிற வகையில்
பெர்னாட்ஷாவின்  பிள்ளைகள் நாம்..

சிற்பமும், சுதையும்
சிறந்தோங்கிய கோவில் வெளிகள்
 யுனெஸ்கோ அறிந்த  ரகசியசங்கள்
டாஸ்மாக் தமிழனுக்கு தெரியுமா என்ன??!!

யவனமும், இலெமூரியாவும்
ராசா ராசன் கட்டிய நாவாயும் 
யாரறிவர்?

மெட்டியின் குறிப்பில்  முகம் நோக்கும்
 தமிழனின் மாட்சிமை அறிவரோ
தமிழச்சியின் பிள்ளைகள் ..

தாய்மொழியில்  படிக்கக் கட்டாயச்  சட்டம்,
தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கும்
 தமிழிலும் அர்ச்சனை செய்யப்படுவதும் 
கட்டியம் கூறும் நம் மாட்சிமையை !!!

அரசியல்வாதியின்
நாவினில் மட்டுமே நர்த்தனமாடுகிறாள்
அபலையாய்ப் போன தமிழன்னை ..இன்று !!

'பண்ணி 'த் தமிழின் தேவையும்,சேவையும்
சங்கமித்துப் போகலாம் இன்னுமோர்
ஆழிப் பேரலை வந்து சென்றிடில்!!!

Tuesday, June 5, 2012

வேலியை மேய்ந்த பயிர்கள்


நித்தமும் காவல்  காக்கும் அவனுக்கு
நிச்சயமாய்த் தெரியாது
அவன் செய்யும் வேலையும், 
அதற்கான மகத்துவமும்.

பயிர்கள்தாம்  சொல்லின 
'நீ எங்கள் கடவுள்' என்றும்
'மண்ணில்  வந்த தேவனென்றும்
மௌனமாய் புன்னகைத்து கொள்வான் அவன்.

தாவிக் கடிக்கும்  ஆடுகளை,
கண்ணமிடும் எலியினை,
குழி பறிக்கும் காட்டுப் பன்றிகளை
இயன்ற வரை எதிர் நின்றான்.
 
சுட்டெரிக்கும் சூரியனோ,
சுழன்றடிக்கும் சூறாவளியோ,
சோவென்ற பெருமழையோ,
சொல்லாமல் வந்த கடுங்குளிரோ,
பறித்துப் போனதந்த பயிர்களின் உயிரை

"எம் உடன்பிறப்புகள் உடைந்து போனதற்கும்
மரித்துப் போவதற்கும்
நீதான் பொறுப்பு,
அலட்சியம்  உன் இருப்பு '
பதில் கூறும் அவகாசம் இன்றியும்,
அவன் கழுத்தை நெறித்தன
தவறிப் பிழைத்த சில செடிகள்.


"முட்டாள் பிள்ளைகளே,
நான் இல்லாவிடில் - இல்லை நீங்கள், நீடு வாழிய  நீவிர் "
காவலன் சரிந்தான் கண்ணீரோடு!.
செடிகள் சிரித்தன செண்ணீரோடு!

 

Saturday, April 14, 2012

'தலை' வாசல் ..??

பெரிய மனிதர்களின்
இல்லம் செல்கையில்
சொல்ல வேண்டி இருக்கிறது  -  தெரிவு செய்த காரணங்களை
வாயில் காப்போரிடமும்,
"வாய்" நிறைய வரவேற்பவரிடமும்..

அழைப்பு உள்ளிருந்தே என்பதுதான்
சொல்ல முடியாத உண்மை ...
வரவேற்கும்  குரலின் தொனி
சற்றும் மாறவில்லை இம்முறையும்...
ஒளிந்து வாலாட்டுகிற  நாயோ, 
முதல் முறை குரைத்ததாய் ஞாபகம் ....

காரணங்கள் இருந்து போகட்டும்  என்னவாகிலும்.
வந்த நேரமும் , வந்தவன் வயதுமே முக்கியம் - என்கிற
உலகப் பொது விதிகள் இதற்கும் பொருந்தும் ..


வந்து செல்வதில் ஆதாயங்கள்  இருப்பின்,
புன்னகையின் நீளம் கூடிடலாம்,
சில மில்லி மீட்டர்கள் .


செல்கிற வீடுகளில் பாவையர் இருப்பின் 
பார்வைகள் அனல் கக்கும் - நெற்றிக் கண்  திறவாது
வந்தவன் பார்வையை குறை சொல்லி

சென்றபின் துவங்குகிற சொல்லாடல்கள்,
விழாத காதுகள்
கொடுத்து வைத்தவை ..

விழுந்து தொலைத்தால் ..மறத்தல் நலம் .
மறவாது செல்லாதிருத்தல் உன்னதம் ..அதி உத்தமம்







Monday, April 9, 2012

பெருவழிப் பயணம் ......

திரும்பவும் திரும்பி வருவேன் என
எண்ணிச் செல்கிறேன்
திரும்பாமலே போகலாம் என்பது தெரிந்திருந்தும்,
கடந்து செல்கிறேன் என எண்ணிக் கொண்டு
பார்த்துச் செல்கிறேன் -
திரும்பி
திரும்பவும் வரலாம் என்பதன் நிகழ் தகவு
எப்போதுமே சூனியத்திலிருந்து துவங்குகிறது

திரும்புத லோ விரும்புதலோ
நிகழ்ந்திடலாம் நமது எல்லையில் ...
கடக்க முடியா  தருணங்கள்
முடக்கிப் போடும்  எல்லையாய்
தீர்மானிப்பது  எது...???
நானா? விதியா?? கடவுளா??
மூன்றும் தாண்டிய தொன்றா?
மூன்றும் சேர்வதுதான் என்றா ?
கடத்தலென்பது சார்பியல் விதியோ ??
எதுவுமில்லை என்பதுதான் மதியோ ?
விடையிருக்காத வினாக்கள்
ஆன்மீகமாய்  அமானுஷ்யமாய் கடந்துபோகின்றன
கடந்து போகிற எல்லாவற்றையும் போலவே !!!!




Thursday, April 5, 2012

அத்துமீறல் ..

அன்புக்குரியவனின்
இடை வளைத்து
இறுக அணைத்திருக்கும்
 பின்னிருக்கை நங்கை
கடந்து செல்கிற நொடியில்
இறுக்கம்
சற்றே தளர்த்தி
உள்நுழைகிற என் பிம்பத்தை
அகல விரித்த விழிகளில்
விழுங்கிக் கொள்கிறாள் - யாருமறியாமல்
இறுக்கம் தொடரினும் 
எஞ்சிய ஒரு துளி,
இதழினோரம் வழிந்திடும் புன்முறுவலாய்  !!!

Saturday, March 3, 2012

நான் ...???!!!

கடற்கரை மணல்
ஒற்றை செருப்பு
தூக்கியெறிந்த தண்ணீர் பொட்டலம்
கிழிந்த உடை
உடைந்த பானை
உதிர்ந்த பூக்கள்
கசங்கிய காகிதம்
அலையின் சப்தம்
உப்புக் காற்று
நான்

Friday, February 24, 2012

ஒரு கோப்பை தேநீர்


ஒரு கோப்பைத் தேநீர்
எனக்கு முன்பாய்!
இதற்கு முன்பும்
இருந்திருக்கிறது
ஆனால் இத்தனை நேரம்
இருந்ததில்லை எப்போதும்

இந்த இளஞ்சூட்டிலும்,
இதற்கு முந்தைய சூட்டிலும்
எப்போதும் பருகியிருக்கிறேன்
இப்போதோ....
எடுத்துக் குடிக்கத் தோன்றிடவில்லை
எழுந்து போகவும் இயலவில்லை

பக்கத்தில் இருப்பவரோ
எதிர் இருக்கை நபரோ
சொல்லப் போவதில்லை எதுவும் !
தேநீரிலிருந்து குளம்பிக்கு
மாற்றுவது  தவிர

வெறித்த விழிகளில்
புகைடியாடியது  நினைவுகள்

ஆறும் தேநீரும் ,
கொதிக்கிற உள்ளமும்
எதிர் தகவில் !!!

எம் தேவ பானத்தின் வழி
வாழ்வு நிகழ்த்தும்  கற்பிதம்

நானே தேர்ந்தெடுக்கிறேன்
குளம்பியா , தேநீரா ,

விரும்பியதும், வாங்கியதும் நானென்பதால்
விளைவும் என்னுடையதே !!!

யாரும் சொல்லப் போவதில்லை
குடிப்பதற்கோ, கொட்டிவிடவோ

எமது  முடிவை
நகலெடுக்க மட்டும்
சீனப் பெருஞ்சுவரின் நீளத்தில்
மக்கள்  கூட்டம் ...





Tuesday, February 14, 2012

பற (வா)..!

'பறவை' என்று விளிக்கப் பட்டேன்;
பறந்து காட்டப் பணிக்கப் பட்டேன்;
பறவையின் வாழ்வியல் அறிந்திலேன்;
பறத்தலின் விதிகளும் அறிந்திலேன்;
பறந்த கதை சொன்னவர்   
பரவலானோர்;
மறந்து போனதாய்
நழுவினர் வகையாய் ;
இன்னும்  சிலர் !

பறந்து காட்டுவோர் யாருமிலர் !
 

புரிந்ததை, புரிந்து கொள்ள
சொல்லுதல் ஏலுமோ ?
யான் பறப்பதும்
ஓர் நாள் நிகழுமோ ?

பிறந்ததால் மட்டுமே,

பறந்து போதல் ஆகுமோ ?
பறந்தவர் திரும்பிடில் ,
இயம்பிடில்;

பறத்தல் சாத்தியம் ,
இது சத்தியம் !!!

Wednesday, February 8, 2012

"நொடி"


உன்னைக் கண்ட நொடியில் 
நொடித்துப் போன
என் கடிகார முட்களை

சரி செய்து  கொள்கிறேன் 

நீ கடந்து போகிற நேரத்தில்

தவறாமல் நின்று போகட்டும் என்பதற்காய்



காலக் கோடுகள்


கணவனின்  இடை வளைத்தமர்ந்த
பின்னிருக்கை பயணங்களில்
காதலனின் சாயலில்,
பிம்பம் விழுகிற கணங்களில்  
இலையுதிர்க் காலத்தில்  எஞ்சிய ஒன்றாய்  
இதழ்களில் புன்னகையும்,
இமைகள் மீறிய நீர்த் துளிகளையும்,
யாருமறியாமல் துடைத்தெறிகிறாய் !!!
 



 

வருகை "பதிவு"

கடந்து போகிற கணப் பொழுதிலும்
உயர்த்திடும் புருவ கோபுரங்களிலும்,
கருவிழிகளின் ஈரப் பார்வையும் ,
இதழ்களின் ஓரம் குறு நகையும் தந்து

பதிவு செய்து கொள்கிறாய்
எனது வருகையை
யாருமறியாமலே !!! 

Thursday, January 19, 2012

நண்பன்

வலுவான திரைக்கதை ,எல்லோரும் அறிந்த கதை ,.இதை  எப்படி தமிழ் படுத்தப் போகிறார்களோ , அதுவும் ஆமிர்  கான் இடத்தில் இளைய தளபதி  என்கிற எண்ணங்களில் ஆழ்ந்த .(அதாங்க Preoccupation )..என்போன்றவர்களுக்கு பதில் சொல்கிற விதமாய்,சங்கர் எடுத்திருக்கிறார். பொருட்செறிவு எல்லோரும் அறிந்ததே All z well, follow your heart,.நன்றாகச் செய்திருக்கிறார் விஜய் (இமேஜ் வட்டம் தாண்டி அடி,உதை,திட்டு  எல்லாம் வாங்கி ) ..மூன்று நடிகர்கள் சேர்ந்து நடித்ததும் வரவேற்கத் தக்க ஒன்று .. கத்ரினா இடத்தில் ,இலியானா அருமையான தேர்வு... சத்தியராஜ் , ஜீவா ,ஸ்ரீ  காந்த் , சத்யன்,அனுயா  எல்லோரும் தத்தமது பணியைச் சிறப்பாய்ச்  செய்திருக்கிறார்கள்.....ஒளிப்பதிவு ,பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன , 
 

Sunday, January 8, 2012

பொதிகை !!

புயலால் பாதிக்கப் பட்டு , பல பகுதிகளில் மின்சாரமே வராத நிலையில் , கேபிள் இணைப்பு இல்லாததால் , வேறு வழியே இல்லாமல் பொதிகை சேனலை பார்த்தோம் . அட அட.நான் ஒண்ணாப்பு படிச்சப்போ ஒளிபரப்பான 'எதிரொளி' ( ஞாபகம் இருக்கா ஒரு அம்மணி கடுதாசி எடுத்து கொடுக்க , சோடா புட்டி கண்ணாடி போட்ட ஒருத்தர் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைஎல்லாம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்று தீவிரமா யோசிப்பாரே அதேதான் !!)...அவங்களைக் கூட விடுங்க ..அந்தக் கடிதங்களைஎல்லாம் எழுதியவர்களிடம் ( 'மொழி'  பாஸ்கர் வகையறாவோ??!!!!) ஒன்று கேட்கத் தோன்றியது  ,அண்ணே மொபைல்  போனு, இண்டர்நெட்டு ஈ -மைலு எல்லாம் வந்தாச்சு ணே ,..இன்னமுமா கடுதாசி எழுதறிங்க  ?? ( படைப்பா நீலாம்பரி போல  பதினெட்டு வருஷமா நீங்க ஒரே சானலைத் தான் பார்த்துட்டு இருக்கிங்களா ணே!!!) அதன் பிறகு ஒரு சீரியல் ....(ஸ்டுடியோ -குள்ளயே  வச்சு கேமரா பாத்து பாத்து பேசுவாங்களே அதேதான் !!)....போதும் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் ...அதன் பிறகு ..கொலை முயற்சி வாழ்க்கை சந்திக்க நேரலாம் !!