Friday, February 24, 2012

ஒரு கோப்பை தேநீர்


ஒரு கோப்பைத் தேநீர்
எனக்கு முன்பாய்!
இதற்கு முன்பும்
இருந்திருக்கிறது
ஆனால் இத்தனை நேரம்
இருந்ததில்லை எப்போதும்

இந்த இளஞ்சூட்டிலும்,
இதற்கு முந்தைய சூட்டிலும்
எப்போதும் பருகியிருக்கிறேன்
இப்போதோ....
எடுத்துக் குடிக்கத் தோன்றிடவில்லை
எழுந்து போகவும் இயலவில்லை

பக்கத்தில் இருப்பவரோ
எதிர் இருக்கை நபரோ
சொல்லப் போவதில்லை எதுவும் !
தேநீரிலிருந்து குளம்பிக்கு
மாற்றுவது  தவிர

வெறித்த விழிகளில்
புகைடியாடியது  நினைவுகள்

ஆறும் தேநீரும் ,
கொதிக்கிற உள்ளமும்
எதிர் தகவில் !!!

எம் தேவ பானத்தின் வழி
வாழ்வு நிகழ்த்தும்  கற்பிதம்

நானே தேர்ந்தெடுக்கிறேன்
குளம்பியா , தேநீரா ,

விரும்பியதும், வாங்கியதும் நானென்பதால்
விளைவும் என்னுடையதே !!!

யாரும் சொல்லப் போவதில்லை
குடிப்பதற்கோ, கொட்டிவிடவோ

எமது  முடிவை
நகலெடுக்க மட்டும்
சீனப் பெருஞ்சுவரின் நீளத்தில்
மக்கள்  கூட்டம் ...





Tuesday, February 14, 2012

பற (வா)..!

'பறவை' என்று விளிக்கப் பட்டேன்;
பறந்து காட்டப் பணிக்கப் பட்டேன்;
பறவையின் வாழ்வியல் அறிந்திலேன்;
பறத்தலின் விதிகளும் அறிந்திலேன்;
பறந்த கதை சொன்னவர்   
பரவலானோர்;
மறந்து போனதாய்
நழுவினர் வகையாய் ;
இன்னும்  சிலர் !

பறந்து காட்டுவோர் யாருமிலர் !
 

புரிந்ததை, புரிந்து கொள்ள
சொல்லுதல் ஏலுமோ ?
யான் பறப்பதும்
ஓர் நாள் நிகழுமோ ?

பிறந்ததால் மட்டுமே,

பறந்து போதல் ஆகுமோ ?
பறந்தவர் திரும்பிடில் ,
இயம்பிடில்;

பறத்தல் சாத்தியம் ,
இது சத்தியம் !!!

Wednesday, February 8, 2012

"நொடி"


உன்னைக் கண்ட நொடியில் 
நொடித்துப் போன
என் கடிகார முட்களை

சரி செய்து  கொள்கிறேன் 

நீ கடந்து போகிற நேரத்தில்

தவறாமல் நின்று போகட்டும் என்பதற்காய்



காலக் கோடுகள்


கணவனின்  இடை வளைத்தமர்ந்த
பின்னிருக்கை பயணங்களில்
காதலனின் சாயலில்,
பிம்பம் விழுகிற கணங்களில்  
இலையுதிர்க் காலத்தில்  எஞ்சிய ஒன்றாய்  
இதழ்களில் புன்னகையும்,
இமைகள் மீறிய நீர்த் துளிகளையும்,
யாருமறியாமல் துடைத்தெறிகிறாய் !!!
 



 

வருகை "பதிவு"

கடந்து போகிற கணப் பொழுதிலும்
உயர்த்திடும் புருவ கோபுரங்களிலும்,
கருவிழிகளின் ஈரப் பார்வையும் ,
இதழ்களின் ஓரம் குறு நகையும் தந்து

பதிவு செய்து கொள்கிறாய்
எனது வருகையை
யாருமறியாமலே !!!