Sunday, December 25, 2011

மௌன சாட்சி

பொரை ஏறிடும் தருவாயில்
வந்து விழும்  வார்த்தைகள் ..
அன்புக்குரியவர்கள் யாரும்
நினைத்திருக்கலாம்  என்பதாக ....
நீதான்....என்பது தெரியுமாதலால்
துடைத்துக் கொள்கிறேன் தண்ணீரை
கடைவாய் உதிக்கிற புன்னகையும் சேர்த்து !!!..

Thursday, December 22, 2011

பா(ர்)வை

தொடுகையில் விரலிடை நிரடுகிற நீறும்,குங்குமமும் எப்படி வந்ததென்றுதான்
இது வரை  புரியாதிருந்தது...
இதோ இந்த நெரிக்கிற பார்வையின்
அர்த்தம்  கூட  ....



Monday, December 19, 2011

நறுமுகை ...

எனது விழித்திரை நிறைத்திடும்
உனது பிம்பங்களில்
நான் உள் நுழைகையில்
நெற்றி நெரித்து
இமை விரித்து,
இதழ் பிரித்து,
மெல்லிய  புன் முறுவலுடன்  .
அளித்துச் செல்கிறாய் - ஒரு  
சிவப்புக் கம்பள வரவேற்பை ....

Sunday, December 11, 2011

துரத்திடும் விரல்கள்

ஆளரவமற்ற பின்னிரவு வேளைகளில் 
திரையங்கின் மெல்லிய இருளில்,
தொலை தூரப் பேருந்தின் பின்னிருக்கைகளில்,
துரத்தியபடியே இருக்கின்றன சில விரல்கள்

துரியோதனன்
பிளந்த இடத்தில் தாளமிடும் அவை
மெல்ல உள்நுழையும்
கொடிய தருணங்களில்
திடுக்கிட்டுக் கண் விழிக்கிறேன்
தட தடக்கத் துவங்கிய இதயம்
இன்னும் வேகமாய் துடிதுடிக்கிறது .

உற்று நோக்கிடும் முகங்களும்,
நீல நாகம் குறித்த புறங்கையும்,
ஒற்றை கடுக்கன் தரித்த காதும்,
உயிர் கொண்ட உறவுகளும் அத்து மீறும்
நீள் நகம்  கொண்ட இரவுகளும்,
நரகமாக்கும் வாழ்வை - கடந்து போகையில்

மடியமர்த்தப்படும் கைப்பை கொண்டு
கடந்து விடுகிறேன் -பேருந்துப்  பயணங்களை..!

திடகாத்திர நண்பர்கள் துணையுடனே
சமாளிக்கிறேன்- திரையரங்க தருணங்களை!

சாமர்த்தியமாக தவிர்த்துவிடுகிறேன் 
இரவுகளின் வெளித் தங்கலை..!.

நிசப்தம் கிழித்து தடதடக்கிற
தொடர் வண்டியின் இரவுப் பயணங்களில்,
உறங்கும் வழிதான் புரிபடவில்லை !!!


 

'நிலை'ப்"பாடு"

உன்னை அழ வைத்திடலாம். 
மெல்லிய  இதயம் சிதைந்திடலாம் ..
புன்னைகைப் பூக்கள் உதிர்ந்து போகலாம் ...
உயிரின் நீளம் குறைந்து போகலாம் ....
என்றே என் காதலை மறைத்து வைக்கிறேன்
உயிரின் ஆழத்தில்  புதைத்து வைக்கிறேன்
உன் நினைவை மறக்க மட்டும்
மறந்து போகிறேன்  -தினமும்
இறந்து பிறக்கிறேன்.

சமர்ப்பணம் ...

நீ உதிர்த்துச் செல்கிற
இந்த புன்னகைப் பூக்கள்
எனக்கானவை அல்ல
என்பது தெரிந்தே இருந்தும்
சேகரித்துக் கொள்ளுகிறேன் - என்றேனும்
 நீ கண்ணீர் சிந்துகிற தருணங்களில்
உனது காலடியில் சமப்பிப்பதர்க்காய்!!!!!

Wednesday, December 7, 2011

புதிர்...


நீ ஒரு புரியாத புதிர் -என்று சொன்னார்கள்
புரிந்து கொள்ளவே இயலாத
புதிரொன்றும் இல்லை - என்று  எண்ணி ,
உன்னைப் புரிந்து  கொள்ள முயல்கையில்
தெளிவாய்ப் புரிந்தது எனக்கு
நீ புரியாத  புதிரொன்றும் இல்லை ..- யாரும்
புரிந்து கொள்வதை விரும்பாத புதிரென்று ...
யாருக்குமே விளங்காத புதிர் உன்னை
நான் மட்டும் புரிந்து கொள்ள முயற்சிக்கும் 
புதிர்தான் விளங்கவில்லை இன்னும் ....



மகி (குமி )ழ்வு

காற்றுக் குமிழ் கைகளினின்றும்
மோதி உடைபடும் புள்ளி 
நம் மகிழ்வின் எல்லை
இன்னொன்றை  ஊதி
அனுப்பிடும் எத்தனிப்பில் 
சிறு குழந்தையின்  உலகம் .....