Saturday, April 14, 2012

'தலை' வாசல் ..??

பெரிய மனிதர்களின்
இல்லம் செல்கையில்
சொல்ல வேண்டி இருக்கிறது  -  தெரிவு செய்த காரணங்களை
வாயில் காப்போரிடமும்,
"வாய்" நிறைய வரவேற்பவரிடமும்..

அழைப்பு உள்ளிருந்தே என்பதுதான்
சொல்ல முடியாத உண்மை ...
வரவேற்கும்  குரலின் தொனி
சற்றும் மாறவில்லை இம்முறையும்...
ஒளிந்து வாலாட்டுகிற  நாயோ, 
முதல் முறை குரைத்ததாய் ஞாபகம் ....

காரணங்கள் இருந்து போகட்டும்  என்னவாகிலும்.
வந்த நேரமும் , வந்தவன் வயதுமே முக்கியம் - என்கிற
உலகப் பொது விதிகள் இதற்கும் பொருந்தும் ..


வந்து செல்வதில் ஆதாயங்கள்  இருப்பின்,
புன்னகையின் நீளம் கூடிடலாம்,
சில மில்லி மீட்டர்கள் .


செல்கிற வீடுகளில் பாவையர் இருப்பின் 
பார்வைகள் அனல் கக்கும் - நெற்றிக் கண்  திறவாது
வந்தவன் பார்வையை குறை சொல்லி

சென்றபின் துவங்குகிற சொல்லாடல்கள்,
விழாத காதுகள்
கொடுத்து வைத்தவை ..

விழுந்து தொலைத்தால் ..மறத்தல் நலம் .
மறவாது செல்லாதிருத்தல் உன்னதம் ..அதி உத்தமம்







Monday, April 9, 2012

பெருவழிப் பயணம் ......

திரும்பவும் திரும்பி வருவேன் என
எண்ணிச் செல்கிறேன்
திரும்பாமலே போகலாம் என்பது தெரிந்திருந்தும்,
கடந்து செல்கிறேன் என எண்ணிக் கொண்டு
பார்த்துச் செல்கிறேன் -
திரும்பி
திரும்பவும் வரலாம் என்பதன் நிகழ் தகவு
எப்போதுமே சூனியத்திலிருந்து துவங்குகிறது

திரும்புத லோ விரும்புதலோ
நிகழ்ந்திடலாம் நமது எல்லையில் ...
கடக்க முடியா  தருணங்கள்
முடக்கிப் போடும்  எல்லையாய்
தீர்மானிப்பது  எது...???
நானா? விதியா?? கடவுளா??
மூன்றும் தாண்டிய தொன்றா?
மூன்றும் சேர்வதுதான் என்றா ?
கடத்தலென்பது சார்பியல் விதியோ ??
எதுவுமில்லை என்பதுதான் மதியோ ?
விடையிருக்காத வினாக்கள்
ஆன்மீகமாய்  அமானுஷ்யமாய் கடந்துபோகின்றன
கடந்து போகிற எல்லாவற்றையும் போலவே !!!!




Thursday, April 5, 2012

அத்துமீறல் ..

அன்புக்குரியவனின்
இடை வளைத்து
இறுக அணைத்திருக்கும்
 பின்னிருக்கை நங்கை
கடந்து செல்கிற நொடியில்
இறுக்கம்
சற்றே தளர்த்தி
உள்நுழைகிற என் பிம்பத்தை
அகல விரித்த விழிகளில்
விழுங்கிக் கொள்கிறாள் - யாருமறியாமல்
இறுக்கம் தொடரினும் 
எஞ்சிய ஒரு துளி,
இதழினோரம் வழிந்திடும் புன்முறுவலாய்  !!!