அவன் அப்படித்தான்
பிடித்திருக்கிறதா என்றால்
ம்ம் என்பான்
இன்னும் ஒரு தோசை வேண்டுமா என்றால்
வேண்டாம் என்பான்
தோசை வைத்து சாப்பிடு என்றால்
மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவான்
யாராவது அவனிடம் நான் எப்படி என்றால்
மெல்லத் தலையாட்டிக் கொள்வான்
நேரே திட்டியதில்லை யாரையும்
திட்டிவிட்டால்
மன்னிக்க சொல்லி
பலமுறை வேண்டிகொள்வான் மனதிற்குள்
ஏன் அமைதியாக இருக்கிறாய், என்ன யோசிக்கிறாய் என்றால்
அதற்கும்அமைதியாகவே இருப்பான்
புதியவர்களைக் கண்டால் ஒதுங்க பார்ப்பான்
தெரிந்தவர்களை சந்திக்க நேர்ந்தாலோ
ஒளிந்து கொள்ளவும் முயல்வான்
அவனுக்கு மவுனத்தை பரிசளிப்பவர்களை
நன்றியோடு நினைவு கூர்கிறான்
அவனுக்கு தனிமையை தந்தவர்களிடம்
தனி மரியாதை வைத்திருக்கிறான்
அவன் ஒன்றும் அதிசயமானவன் அல்லன்
இதே தெருவில்
பல முறை அவனை பார்திருக்கிறீர்கள்
பேசவும் செய்திருக்கிறீர்கள்
எல்லோருக்குள்ளும் அவன் சாயல் இருக்கிறது
எல்லோருக்குள்ளும் அவன் நிழல் இருக்கிறது
ஆதி மனிதனின் பயத்தின் நீட்சி அவன்
குகை மனிதனின் மனசாட்சி அவன்











